1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

லண்டன் நகரத்தில் உள்ள பிரிட்டனுக்கான மியன்மார் தூதரகத்திலிருந்து, அந்நாட்டின் தூதர் வெளியேற்றப்பட்டார்.க்யாவ் ஸ்வார் மின் பிரிட்டனுக்கான மியன்மார் தூதர். மியன்மார் தூதரகத்தின் ராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மேலும், இனி க்யாவ் ஸ்வார் மின் மியன்மார் நாட்டின் பிரதிநிதி அல்ல எனவும் அந்த ராணுவ அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"நான் வெளியேற்றப்பட்டு இருக்கிறேன்" என ராய்ட்டர் செய்தி முகமையிடம் கூறியுள்ளார் க்யாவ் ஸ்வார்.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மியான்மர் ராணுவம், அந்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது. அதனை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கினர். அப்போராட்டங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பிரிட்டனுக்கான மியான்மர் தூதர் க்யாவ் ஸ்வார் மின், ஆங் சான் சூச்சியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதற்காகவும் போராடிய மக்களை எதிர்கொள்ள, மியான்மர் ராணுவம் எடுத்த நடவடிக்கையால் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடக்கம்.

"இது லண்டனில் நடக்கும் ஒரு வகையான ஆட்சிக் கவிழ்ப்பு தான்" என நேற்று (07.04.2021, புதன்கிழமை) நடந்த சம்பவத்தை விவரிக்கிறார் க்யாவ் ஸ்வார் மின்.

இவர் லண்டனின் மேஃபர் பகுதியில் இருக்கும் மியான்மர் நாட்டு தூதரகக் கட்டடத்தின் முன், லண்டனின் மெட்ரோபொலிடன் காவலர்களோடு பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன.

தூதரக அதிகாரிகள் யாரும் தூதரகத்தில் நுழைந்துவிடாத படி தடுத்த நிறுத்த, காவலர்கள் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விவரம் வெளியானதிலிருந்து, மியன்மார் தூதரக கட்டடத்துக்கு முன் மக்கள் போராடத் தொடங்கி இருக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதமே, க்யாவ் ஸ்வார் மின், ஆங் சான் சூச்சியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதோடு மியான்மர் பிளவுபட்டு கிடப்பதாகவும், அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தான் இப்படிப் பேசுவது, தன் நாட்டுக்கு துரோகம் இழைப்பதாகப் பொருளல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.

க்யாவ் ஸ்வாரின் கருத்தையும், அவரது தேசப்பற்று மற்றும் தைரியத்தையும் பிரிட்டனின் வெளிவிவகாரத் துறைச் செயலர் டொமினிக் ராப் பாராட்டினார். இத்தனைக்கும் க்யாவ் ஸ்வாரே ஒரு மியான்மர் ராணுவத்தில் கர்னலாக உயர் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

க்யாவ் ஸ்வார் வெளியேற்றப்பட்ட பின், துணைத் தூதர் சிட் வின் பிரிட்டனுக்கான தூதராக பொறுப்பேற்று இருப்பதாக ராய்டர்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நாட்டுக்கான மியன்மார் தூதர் தொடர்பான கூடுதல் விவரங்களைக் கேட்டிருப்பதாக பிரிட்டன் வெளிவிவகாரத் துறை அலுவலகத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மியன்மார் - சில குறிப்புகள்

மியன்மார், பர்மா என்றும் அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.

2010-ம் ஆண்டு வாக்கில் இந்தபிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

மியன்மாரில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, ராணுவம் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி