1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்குமாறு கோரி இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினூடாக இந்த மனு உயர் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சீனாவின் Sinopharm தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன், தரம் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக முறையான அனுமதி வழங்கப்படும் வரை, அந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நோயாளர்களின் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், அதன் தலைவர், செயலாளர் ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினூடாக இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி, மருந்து உற்பத்தி, பகிர்ந்தளித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட 24 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சீனாவின் தடுப்பூசி நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களை தன்னிச்சையாக நீக்கும் செயற்பாடு பொது மக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், அது அரசியல் அமைப்பை மீறும் செயல் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, குறித்த தடுப்பூசி தொடர்பில் ஆராய நியமித்த நிபுணர் குழுவின் விபரங்களையும் தடுப்பூசி தொடர்பில் கோரிய விடயங்களையும் வெளிப்படுத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன், தரம் உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் வரை அதனை இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்படல் வேண்டும் எனவும், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று தீர்ப்பு வழங்கும் வரை சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

சீனாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்ட நிலையில், இதற்கு உள்ளுரில் கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டன. எனினும், இலங்கையில் சுமார் நான்கு லட்சம் சீனர்கள் இருப்பதாகவும் இவர்களுக்கு வழங்கவே இந்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு சீனா தடுப்பூசிகள் அனுப்பிவைத்தபோது, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விமான நிலையத்திற்குச் சென்ற அவற்றைப் பொறுப்பேற்றிருந்தார். சீனர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளை ஏன் ஜனாதிபதி சென்று பொறுப்பேற்க வேண்டும் என்ற கேள்வகளும், விமர்சனங்களும் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், சீனாவின் தடுப்பூசியை இலங்கை மக்களுக்குப்பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி