1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.

நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.

நேற்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயகுமார் சொக்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "காலை 11 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரது குடும்பத்தினரால் கொண்டு வரப்பட்டார். அவரது உடல்நிலையை நிபுணர்கள் குழு பரிசோதித்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் உள்ள விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது," என்று கூறப்பட்டிருந்தது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள்

முன்னதாக, நேற்று முன்தினம், வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் விவேக். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்காக, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ஆகியோருக்கும், இரு மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் ட்வீட் செய்திருந்தார்.

ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் ஊசி போட்டுக் கொண்டதற்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தடுப்பூசி - தமிழக அரசு கருத்து

அதேநேரம், தடுப்பூசி தொடர்பான சர்ச்சைக்கு விளக்கமளித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், "நடிகர் விவேக், மிகவும் நல்ல எண்ணத்தில்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் அளிக்கிறது. மத்திய அரசின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இதய கோளாறு, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விவேக்கின் நிலைமை எங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் உள்ளது. நேற்றைய தினம் எங்களுடன் இருந்தவருக்கு, இன்றைய தினம் இதுபோன்ற இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும், இதற்கும் நேற்று தடுப்பூசி போட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.

விவேக்

தொடர்ந்து, நடிகர் விவேக் குணமடைய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு ஒன்றின்போது எம்.ஜி.ஆர் போன்ற வேடத்தில் நடிகர் விவேக்

சமூக அக்கறை உள்ள கலைஞன்

படப்பிடிப்பு ஒன்றின்போது எம்.ஜி.ஆர் போன்ற வேடத்தில் நடிகர் விவேக்

தற்போது 59 வயதாகும் நடிகர் விவேக், நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறையுள்ள கலைஞராகவே பார்க்கப்பட்டார். தான் நடித்த படங்களிலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியதால், `சின்ன கலைவாணர்' என்று அவர் அழைக்கப்பட்டார்.

முற்போக்கான கருத்துகளை திரைப்படத்தில் பரப்பியதற்குப் பெயர் பெற்ற பழம் பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். விவேக்கின் நகைச்சுவைகளும் அப்படிப்பட்ட கருத்துகளைத் தாங்கி வந்ததாக கருதப்பட்டதால், அவர் சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என அக்கறை காட்டினார். இதுவரையில் 33,23,000 மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் நடிகர் விவேக்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி