1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொலனறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் பொலனறுவை முதல் கொழும்பு வரையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த ரயில் சேவையானது பொலனறுவையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு கொழும்பினை வந்தடைகின்றது. அதே போன்று கொழும்பிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு பொலனறுவையினை சென்றடைகின்றது.

இந்தநிலையில் அமைச்சர் அவர்களே அதிகாலை 3 மணிக்கு பொலனறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா என்பதனை ஆராயந்து பாருங்கள்.

அதிகமான நேரங்களில் காலியான இருக்கைகளுடனேயே ரயில் கொழும்பினை சென்றடைகின்றது. பொலனறுவையில் இருந்து சேவையினை ஆரம்பிக்கின்றமை காரணமாகவே குறைந்தளவானவர்கள் பயணிக்கின்றனர்.

எனவே பொலனறுவைக்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததன் பின்னராக, பொலனறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா?

ஏனெனில் தற்போது மட்க்களப்பிலிருந்து கொழும்பிற்கு வரும் ரயில் பயணிப்போர் இரண்டு நாட்களாவது கொழும்பில் தங்கியிருந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் காலை 9 மணிக்கு கொழும்பிற்கு வருகை தந்தால், தங்களது கடமைகளை பூர்த்தி செய்து கொண்டதன் பின்னர் மீண்டும் அன்றைய தினம் மாலையே மட்டக்களப்பிற்கு திரும்பி செல்ல முடியும்.

நான் பொலனறுவை – கொழும்பிற்கான ரயில் சேவைக்கான நேரத்தினை மாற்றுமாறு கூறவில்லை அந்த நேரத்திற்கு முன்னராக மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்க முடியுமா என்றே கேட்கின்றேன். என்றார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுடன் பேசிவிட்டு உரிய பதிலினை வழங்குவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “அதிகாரிகள் இதனை செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே வெள்ளோட்ட முறையில் இதனை செய்து பார்க்க முடியுமா?“ எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி