1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சமூக ஊடகங்களில் வாரணாசியின் ஒரு புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. ஒரு இ-ரிக்‌ஷாவில் அமர்ந்திருக்கும் ஒரு அபலைத் தாயின் காலடியில் உயிர்விட்ட மகனின் படம் அது. இந்தக் காட்சி, உண்மையிலேயே மனதை நொறுங்க வைக்கிறது. இன்னொரு விஷயம் இது பிரதமர் நரேந்திர மோதியின் தொகுதியில் நடந்துள்ளது. அதனால் இது வெகு விரைவிலேயே சமூக ஊடங்களில் வைரலானது. இதே சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொரு படமும் வைரலாகி வருகிறது.

அந்தத் தாய், உதவி வேண்டி, மகனின் ஸ்மார்ட் ஃபோனைத் திறக்க முயற்சிக்கும் காட்சி தான் அது. இந்தப் பெண்மணி, வாரணாசியைச் சேர்ந்த ஜான்பூரில் உள்ள அஹிரௌலி (ஷீதல்கஞ்ச்)-யில் வசிக்கும் சந்திரகலா சிங்க். கடந்த திங்கட்கிழமை அவர் தனது 29 வயது மகன் வினீத் சிங்கின் சிகிச்சைக்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார். வினீத் மும்பையில் ஒரு மருந்து கடையில் சாதாரண வேலை பார்த்து வந்தவர். கொரோனா பெருந்தொற்றுப் பரவலையடுத்து இவரது வேலை பறிபோனது. எனவே இவர் தனது சொந்த கிராமத்துக்கு வந்து விட்டார்.

வாரணாசி: திக்கற்ற தாயின் காலடியில் மகனின் மரணம்

அவருக்கு BHU மருத்துவமனையில் அனுமதி கிடைக்கவில்லை. அதன் பிறகு அவர் தனது மகனை அருகிலுள்ள சில தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க நினைத்து, இ-ரிக்ஷாவிலேயே சென்றார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை. சில மணி நேரத்தில், வினீத் இ-ரிக்‌ஷாவில் தாயின் கண்முன்னாலேயே உயிரை விட்டார். தனது இளம் மகனின் அகால மரணத்தின் அதிர்ச்சியை விட, தன் மகனின் உயிரைக் காப்பாற்றத் தவறி விட்டோமே என்ற துக்கம் தான் அந்தத் தாயை வருத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து முழுவதும் விவரித்தார் அந்தத் தாய்:

"நாங்கள் BHU மருத்துவமனைக்குச் சென்றோம், அங்கு மருத்துவர்கள் வரவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள அவசர சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லும் படி கூறினார்கள். அங்கு அவனது நிலை இன்னும் மோசமடைந்தது. அங்கே, படிக்கட்டுக்கு அருகிலேயே அவன் படுத்துவிட்டான். ஆனால், அங்கிருந்தவர்கள், இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள், கொரோனா காலமாக இருக்கிறது, அழைத்துச் சென்று விடுங்கள் என்று கூறிவிட்டனர்.""என் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நாங்கள் அங்கே ஆக்ஸிஜன் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியைக் கோரினோம். ஆனால், யாரும் காதில் வாங்கவில்லை. பின்னர் அவனை எப்படியோ இ-ரிக்‌ஷாவில் ஏற்றிக்கொண்டு வேறு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கேயும் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள். அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே என் மகன் துடிதுடித்து இறந்துவிட்டான்." சந்திரகலா சிங்கின் வாழ்க்கையில் இதற்கு முன்னரும் துன்பங்களுக்குக் குறைவில்லை.

அவரது கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். வினீத்தின் அண்ணனும் கடந்த ஆண்டு இறந்தார். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் இரண்டு இளம் மகன்கள் இறந்த வருத்தம் எளிதில் நீங்காது. அவருக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருந்தாலும், தனது ஆதாரமான மகன் இறந்து விட்டதாகவும் தன்னைப் பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள் என்றும் புலம்புகிறார் அந்த ஏழைத் தாய்.

இறப்புக்குக் காரணம்

வாரணாசி: திக்கற்ற தாயின் காலடியில் மகனின் மரணம்

வினீத் சிங் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதிபடுத்தப்படவில்லை. கடந்த சில நாட்களாக அவருக்குக் காய்ச்சலோ குளிரோ வேறு எந்த அறிகுறியோ ஏற்படவில்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

வாரணாசி: திக்கற்ற தாயின் காலடியில் மகனின் மரணம்

வினீத் சிங்கின் சித்தப்பா, ஜெய் சிங், "அவனுக்கு கொரோனாவின் அறிகுறிகள் எதுவும் இல்லை. அவனுக்குக் காய்ச்சலும் இல்லை. முன்பே, அவனுக்குச் சிறுநீரகம் தொடர்பான பிரச்னை இருந்தது என்பது உண்மை தான். அவன் மும்பையில் பணிபுரிந்ததால், அங்கேயே சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அதன் தொடர் சிகிச்சைக்காகத் தான் கடந்த சில நாட்களாக பி எச் யூ மருத்துவமனைக்குச் சென்று வந்து கொண்டிருந்தான்." என்று தெரிவிக்கிறார். "அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனால் டாக்டர் சமீர் திரிவேதியின் ஆன்லைன் சந்திப்புக்கு ஏப்ரல் 19 அன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு எந்த சிகிச்சையும் கிடைக்கவில்லை. அவசர சிகிச்சை மையத்தில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனையிலும் இடம் இல்லை என்று வெளியிலிருந்தே சொல்லி விட்டார்கள். மேலும் கொரொனா கேஸ் என்றும் கூறிவிட்டார்கள். அவனுக்குச் சிறுநீரகப் பிரச்னை இருந்தது. ஆனால் சிகிச்சை பெற்றிருந்தால், ஆக்ஸிஜன் கிடைத்திருந்தால் அவன் உயிர் பிரிந்திருக்காது. மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது." என்கிறார் அவர். "ஒருவரின் உயிர் இழக்கப்படுவதை விட இன்னும் என்ன பெரிய அலட்சியம் இருக்க முடியும்?

ஏழைகளுக்கு செவிசாய்க்காத வகையில் இந்த அமைப்பு மாறிவிட்டது. தற்போது நடைமுறையில் இருக்கும் நிலைமையைப் பார்த்தால் இது போன்ற அலட்சியப் போக்கால் பல உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. " என்று அவர் எச்சரிக்கிறார். 'தைனிக் ஜாக்ரன்' பத்திரிகையில் வெளியான செய்தியிலிருந்து தான் சந்திரகலா சிங் மற்றும் அவரது மகனின் கையறு நிலைக் கதையை உலகம் அறிந்தது. செய்தியாளர் ஷ்ரவன் பரத்வாஜ் இந்தச் செய்தியை எழுதியுள்ளார்.

"காலை பத்து மணியளவில் சகர்மத்தா மஹ்முர்கஞ்ச் சாலையில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எனக்குச் செய்தி வந்தது. நான் அங்கு சென்ற போது, இந்த நெஞ்சைத் துளைக்கும் காட்சியைக் கண்டேன். அந்தத் தாயிடம் முழு விவரமும் கேட்டறிந்து இந்தச் செய்தியை வெளியிட்டேன்" என்று அவர் கூறினார். ஷ்ரவண் பரத்வாஜ் மேலும் கூறுகையில், வினீத் சிங் இறந்த இந்தச் சாலையிலேயே, BHU தவிர பத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரொனா காலத்தில் மருத்துவமனைகளின் நிலை என்ன என்பதை இதிலிருந்தே அறிய முடியும் என்கிறார்.

வாரணாசி: திக்கற்ற தாயின் காலடியில் மகனின் மரணம்

வைரலான இந்தப் படத்தை எடுத்தவர் யார்?

சந்திரகலா சிங் மற்றும் அவரது மகன் ஆகியோரின் படம் வைரலாகி வருகிறது, அந்த படத்தை எடுத்தவர், அந்தப் புகைப்படக்காரர் யார்? இதைப் பற்றி ஷ்ரவன் பரத்வாஜ் கூறுகிறார், "நான் எனது நண்பருடன் அங்கு சென்றேன். எனவே நான் அவரை படம் எடுக்கச் சொன்னேன். அவர் ஒரு அரசு ஊழியர், எனவே நான் அவருடைய பெயரை வெளியிட விரும்பவில்லை."புகைப்படத்தை எடுத்த அரசு ஊழியர், 'ஷ்ரவண் சொன்னதால் நான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். எடுத்த உடனே அதை ஷ்ரனவிடம் கொடுத்து விட்டேன்" என்று கூறுகிறார். தனது மகன் சுமார் 9 மணியளவில் உயிரிழந்ததாக வினீத் சிங்கின் தாயார் கூறுகிறார்.

ஷ்ரவன் பரத்வாஜ் கூறுகையில், தான் பத்தரை மணிக்குச் சம்பவ இடத்தை அடைந்த போது, அங்கே ஏராளமானோர் கூடியிருந்ததாகவும் அதில் சிலரும் புகைப்படம் எடுத்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.

ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான அந்தப் படம் தான் எடுத்தது தான் என்றும் அவர் தெரிவிக்கிறார். சந்திரகலா சிங் தனது மகனின் சடலத்துடன் உதவிக்காகக் காத்திருந்தபோது, முன்னாள் உள்ளூர் கவுன்சிலர் விகாஸ் சந்திராவும் அங்கு சென்றார். அவர் 112 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் போலீஸை உதவிக்கு அழைத்தார்.

உள்ளூர் காவல் துறை பொறுப்பாளரான அனுஜ்குமார் திவாரி கூறுகையில், இளைஞன் என்னவோ இறந்துவிட்டான், ஆனால் அவனது தாயின் நிலையைப் பார்த்து, நாங்கள் இரண்டு காவலர்களை சம்பவ இடத்திலேயே நிறுத்தி வைத்தோம் என்று தெரிவித்தார்.வினீத் சிங் இறந்த பிறகும், அவரது தாயார் ஆம்புலன்ஸ் உதவி பெறுவதில் நிறைய சிரமங்களைச் சந்தித்துள்ளார். காலையில் வாரணாசியில் உள்ள மஹுவாடி நிலையத்தில் அவரை விட்டுவிட்டுச் சென்ற அவரது மைத்துனர் ஜெய் சிங், "நான் எனது மகளை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வர வேண்டியிருந்தது.

அதனால், இவர்களும் என்னுடனேயே வந்தனர். நான் அவர்களை மஹுவாடி அருகே ஒரு இ-ரிக்‌ஷாவில் ஏற்றிவிட்டேன். தில்லியிலிருந்து வரும் என் மகளை நான் அழைத்துக்கொள்கிறேன். அதற்குள் நீங்கள் டாக்டரிடம் காட்டிவிடுங்கள் என்று கூறியிருந்தேன். பிறகு ஒன்பதரை மணிக்கு இவர்களின் ஃபோன் வந்த பிறகு நான் வந்தேன்." என்று விவரிக்கிறார். ஜெய் சிங் கூறுகிறார், "நான் அங்கு சென்றபோது, கூட்டம் கூடியிருந்ததையும் சிறுவனின் சடலம் வெயிலில் கிடப்பதையும் பார்த்தேன். அதை நிழலில் எடுத்துச் செல்லும்படி அவளிடம் சொன்னேன். ஆனால், அந்தத் தாய், அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

பின்னர் ஆம்புலன்ஸை அழைக்கும் முயற்சி தொடங்கியது. பலருக்கு ஃபோன் செய்ய வேண்டியிருந்தது. ஒருவர் 22 ஆயிரம் ரூபாய் கேட்டார். இறுதியாக, 60 கிலோமீட்டர் தூரத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு ஆம்புலன்ஸ் கிடைத்தது. அதன் பிறகு தான் வினீத்தின் உடல் வீட்டிற்கு வந்தது."

வாரணாசி: திக்கற்ற தாயின் காலடியில் மகனின் மரணம்

பி எச் யூ நிர்வாகம் என்ன கூறுகிறது?

கொரோனா நெருக்கடியினால் வாரணாசியில் உள்ள BHU மருத்துவமனையில் அழுத்தம் கணிசமாக அதிகரித்துள்ளது. பூர்வாஞ்ச்சலின் சுமார் நாற்பது மாவட்டங்களின் நோயாளிகளுக்கு ஒரே நம்பிக்கை BHU தான். ஆனால் தற்போதைய அழுத்தத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவமனையில் போதிய முன்னேற்பாடுகள் இல்லை. BHU இன் சர் சுந்தர்லால் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ஷரத் மாத்தூர், "அதிக அழுத்தம் உள்ளது. நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் வருகிறார்கள், ஆனால் நாங்கள் எல்லா நோயாளிகளையும் காப்பாற்றவும் முடிவதில்லை," என்று கூறினார்.

வினீத் சிங்குக்கு ஏன் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஷரத் மாத்தூர், "கொரோனா காரணமாக நேரடி பரிசோதனை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் ஆலோசனையைத் தொடர்கிறோம். இது குறித்த தகவல் அவர்களிடம் இல்லாதிருக்கலாம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து, நிலைமை தீவிரமடைந்த பிறகு இங்கு வந்திருக்கலாம். ஆனால் நேரடி ஆலோசனை இல்லாததால், அவருக்கு இங்கு மருத்துவர்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் நோயாளிகள் அவசர மருத்துவத்தில் சிகிச்சையளிக்கப்படுகிறார்கள்." என்று விளக்கமளித்தார்.தமது தரப்புப் பிரச்னைகள் குறித்துக் கூறும் அவர், மனிதவளப் பற்றாக்குறை உள்ளதாகவும் இருக்கும் அனைவரையும் அவர்கள் பணியமர்த்துவதாகவும் அவர் கூறுகிறார். "ஒவ்வொரு நாளும் நாங்கள் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றி வருகிறோம். ஆனால் மக்களும் மிகவும் தீவிரமான நிலையில் தான் இங்கு வருகிறார்கள். மற்றும் கொரோனா நெருக்கடி வேறு". என்று கூறுகிறார் அவர்.

சமூக ஊடகங்களில் எழும் கேள்வி

இருப்பினும், சந்திரகலா சிங் மற்றும் அவரது மகனின் உடலின் புகைப்படங்கள் வைரலாகி அவை கேள்விக்குள்ளாவதற்குக் காரணம்,

இது பிரதமர் நரேந்திர மோதியின் தொகுதி என்பது தான். அதனால்தான் மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த விஷயத்தை உடனடியாக அறிந்து கொண்டு பிஹெச்யூ மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். வினீத் சிங்குக்கு ஏன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இது குறித்து, BHU நிர்வாகக் குழுவின் கூட்டமும் புதன்கிழமை நடைபெற்றது.ஆனால் இந்த வழக்கு சமூக அவலத்தையும் படம் பிடிக்கிறது. ஒரு அபலைத் தாய் தனது இளம் மகனின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவி கோரியபோது, கூட்டத்தில் யாரோ அவர்களின் பையைத் திருடியுள்ளனர். அதில் வினீத் சிங்கின் சிகிச்சை குறித்த ஆவணங்களும் அவனது செல்ஃபோனும் இருந்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி