1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாகக் கொண்டுள்ள இலங்கை அரசு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க முயல்கிறது.

இதன் மூலம் அரசால் முன்னெடுக்கப்பட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்காமல் போகும் நிலை நாட்டில் ஏற்படக் கூடும் எனும் அச்சங்கள் எழுந்துள்ளன.ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார். அந்த மசோதா மூலம் அதிகாரிகள் உட்பட இராணுவத்தினர், ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் ஆளும் கட்சியின் முக்கியப்புள்ளிகள் மீது தற்போது நீதிமன்றத்திலுள்ள ஏராளமான வழக்குகள் திரும்பப்பெறப்படுகின்றன. அது மட்டுமின்றி அந்த வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுக்கு  தண்டனை அளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் 22 மற்றும் 23ஆம் திகதிகளன்று விவாதிக்கப்படுகிறது.முன்னதாக இந்த மசோதா ஏப்ரல் 21ஆம் திகதி விவாதத்திற்கு வந்த போது சபையில் பெரும்கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு சிறிது நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

அந்த சட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் கிடைத்து அது சட்டமாகும் போது `அதிகாரக் கட்டமைப்பின் குறியீடுகளாக ` ஐ நாவால் அடையாளம் காணப்பட்டு வழக்கை எதிர்கொண்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த பலர் அதிலிருந்து விடுபட்டுசுதந்திரமாகத் திரியும் நிலை ஏற்படக் கூடும். அப்படியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவர்களில் 11 ஆடவர்களைக் கடத்தி, சித்திரவதை செய்து கொல்லப்பட்டது, ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டது,மற்றொரு செய்தியாளரான லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டது, மேலுமொரு பத்திரிகையாளர் கீத் நொய்ஹார் கட த்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது ஆகியவையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடையவர்களும் அடங்குவர்.

கொல்லப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் மீதான அநியாயங்கள் அனைத்தும் போர் வலயத்திற்கு வெளியே நடைபெற்றவை.மிகவும் மோசமான இந்த மனித உரிமை மீறல்கள் தற்போது ஜனாதிபதியாக இருப்பவர் போர்க் காலத்தில் சகல வல்லமையுடன் இருந்த சமயத்தில் நடைபெற்றன. அந்த சமயத்தில் இப்போது பிரதமராக இருக்கும் அவரது சகோதரர் நாட்டின் அதிபராக இருந்தார். பன்னாட்டு அழுத்தங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த முயற்சிகள் காரணமாக நாட்டின் கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரணாகொட உட்பட பல உயர்மட்ட இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

``நீதிமன்றங்களின் முன் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளை திரும்பப் பெறும் முன்னெடுப்புகள் எதையும் தீவிரமாகத் தடுப்போம்`` என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் முடிவுகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தாண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதியன்று உத்தரவிட்டிருந்தார். அந்த ஆணைக்குழு ஏராளமான பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப்பெற பரிந்துரை செய்திருந்தது.

``பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிசில் பதவிகளில் இருந்தவர்கள், சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர், தாங்கள் பழிவாங்கப்படுவதாக கூறப்படுவது குறித்து புலனாய்வு செய்து விசாரித்து தகவல்களைப் பெறுமாறு`` முந்தைய அரசாங்கத்தால் அந்த ஆணைக் குழு அமைக்கப்பட்டது.

இரண்டாயிரம் பக்கங்களுக்கும் அதிகமாகக் கொண்ட அந்த அந்த இறுதி அறிக்கை கடந்த டிசம்பர் 2020ல் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது- `` நாட்டை 30 ஆண்டுக் கால பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றிய போர் வீரர்களை ``- தண்டிக்க  முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஜனாதிபதி தொடர்ச்சியாக போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை அளிக்க முனைப்பாகச் செயல்படுகிறார். அவர் காப்பாற்ற முயற்சிக்கும் நபர்கள் மீது பாரிய மனித உரிமை மீறல்  குற்றஞ்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2019) உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச போர்க் காலத்தில் தன்னுடன் இருந்த படைத்தளபதிகளுடன் இணைந்து ஒரு அறிக்கையை தயாரித்தார். அந்த அறிக்கை பாதுகாப்பு அதிகாரிகளை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில் இருந்தது.கடந்த 2008-09ல் 11 ஆடவர்கள் காணாமல் ஆக்கப்பட்டது மற்றும் ஆட்கடத்தல், சித்திரவதை ஆகியவை தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தவரும் அந்த அறிக்கையை இணைந்து எழுதியவர்களில் ஒருவருமான இலங்கை கடற்படையின் முன்னாள் தலைவர் அட்மிரல் வசந்த கரணாகொடவின் பெயரும் இந்த மசோதாவின் மூலம் விடுவிக்கப்படவுள்ளவர்களின் பட்டியலில் உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்மொழியும் இந்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமானால், இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, கடற்படையின் மற்றொரு முன்னாள் தலைவரான ரியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க, கமாண்டர் சுமித் ரணசிங்க, லெட்.கேணல் பிரசாத் சந்தன குமார ஹெட்டியராய்ச்சி ஆகியோரும் விடுவிக்கப்படுவர். ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை மற்றும் அதையொட்டிய மசோதா சட்டமாகும் போது மேலும் பல முன்னாள், இந்நாள் கடற்படை அதிகாரிகள் மற்றும் இதர படைகளின் அதிகாரிகள் ஆகியோர் விடுவிக்கப்படும் நிலை ஏற்படக் கூடும். கொழும்பில் இரு தமிழர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் லெப். கமாண்டர் எம்.எம். தம்மிக அனில் மாபா மற்றும் லெப். கமாண்டர் டான் சுமேத சம்பத் தயானந்த ஆகியோரும் தண்டனையிலிருந்து தப்புவர்.

கடந்த 2010ல் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளையும் விடுவிக்க அந்த ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது. பிரகீத் கடத்தல் தொடர்பில் குறைந்தது மேலும் 15 படையினரும் அதிகாரிகளும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.

அதே போன்று ஊடகவியலாளர் கீத் நொய்ஹார் கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 14 சந்தேக நபர்களும், இந்த மசோதா நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று சட்டமானால் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவர்.

ஜனாதிபதி ஆணைக் குழுவால் விடுவிக்க பரிந்துரைக்கப்பட்ட பட்டியலுள்ளவர்கள் ஏராளமானோர். அதில் முப்படைகளின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவப் புலனாய்வாளர்கள் மட்டுமின்றி, `அவன்ட் கார்ட் வழக்கு` என்று அறியப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பல முன்னாள் அதிகாரிகளும் இந்த மசோதா சட்டமானால் பயனடைவார்கள்.

பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலராக இருந்த டி எம் சுமனசிறி திஸநாயக்க, அதே அமைச்சின் முன்னாள் துணைச் செயலர் டி எம் சுஜாதா தமயந்தி ஜயரட்ண ஆகியோரும் மேஜர் நிசான்க யாப்பா சேனாதிபதி, மேஜர் ஜெனரல் பாலித ஃபெர்ணாண்டோ மற்றும் விக்டர் சமரவீர போன்ற சந்தேக நபர்கள் மீதான வழக்லிருந்து அவர்களை விடுவிக்க அந்த ஜனாதிபதி ஆணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அரசியல்வாதியான பாரத லக்ஸ்மனின் கொலையில் குற்றவாளி என்று கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள துமிந்த சில்வாவும் இந்த சட்ட மூலம் ஒப்புதல் பெற்றும் சட்டமாகும் போது சுதந்திரமாக வெளியே வர முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜா கடந்த 2006ல் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ள கடற்படை புலனாய்வு அதிகாரி தெலிவல்கெதர காமினி செனிவரட்ன மற்றும் புலனாய்வு அதிகாரி கனகமகே பிரதீப் சமிந்த ஆகியோரும் வழக்கிலிருந்து விடுபட இப்போது வாய்ப்புள்ளது.

ராகபக்ச குடும்ப உறுப்பினர்களான பசில் ராஜபக்ச, யோஷித கனிஷ்க ராஜபக்ச, உதயங்க வீரதுங்க, ஜாலிய விக்ரமசூரிய மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாத் உதய கம்மன்பில ஆகியோரும் இந்த மசோதா சட்டமானால் ஊழல் தடுப்பு ஆணையக் குழு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

பல மில்லியன் டாலர் அளவுக்கு ஊழலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கடந்த 2012 வெலிக்கட சிறையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள சந்தேக நபர்களாக ரனகஜீவ நியோமல் மற்றும் லமஹேவகே எமில் ரஞ்சன் ஆகியோர் மீதான வழக்குகளை மறு பரிசீலனை செய்வதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அந்த மசோதா கோருகிறது.

இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்தால். `` நாட்டில் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுயாதீனம் ஆகியவை கேள்விக்குறியாகி, மோசமான முன்னுதாரணம் ஒன்றை ஏற்படுத்தும்`` என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

`` இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது நீதிமன்றங்கள் மீதோ அல்லது சட்டமா அதிபர் அலுவலகம் மீதோ எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமலும், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லாமலும் இருக்க வேண்டும்`` என்று அந்த சங்கத்தின் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

நாட்டின் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள எந்த குற்ற வழக்குகளையும் விலக்கிக் கொள்ள இந்த மசோதா வழி செய்யுமாயின் அதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகவும் தீவிரமாக எதிர்க்கும் என்றும், அதை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னெடுக்கக் கூடாது என்றும் அந்த சங்கத்தினர் கோரியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டாலும், என்று இந்த மசோதா விவாதத்திற்கு வந்தாலும், அதற்கு ஆதரவு கிடைத்து சட்டமாகும் என்பதில் ஐயமில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தாருங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியது இப்படியான விஷயங்களை முன்னெடுக்கத்தானோ என்று பல்தரப்பில் இப்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி