1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் என்ன வித்தியாசம்? எவ்விதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது?

இந்தியாவில் முதல் அலை டிசம்பர் மாதவாக்கில் ஒரு முடிவுக்கு வருவதைப் போல இருந்தது. டிசம்பர் இறுதியிலிருந்து மார்ச் மாதம் வரை சற்று இடைவெளி இருந்தது. குறிப்பாக பிப்ரவரி மாத மத்தியில் மிகவும் குறைந்திருந்தது.

ஆனால், மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் முதல் வாரத் துவக்கத்திலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவுடன் பலரும் திருமணங்கள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்த ஆரம்பித்தது, தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றால் பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது. இதனால் மீண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஏப்ரல் 23ஆம் திகதியன்று மட்டும் தமிழ்நாட்டில் புதிதாக 12,652 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது. சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 89,428ஆக உயர்ந்தது. கடந்த அலையைக் காட்டிலும் இந்த முறை, நோயின் தீவிரமும் பரவும் வேகமும் வெகுவாக அதிகரித்திருப்பதை மருத்துவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

மருத்துவர் பரந்தாமன்

​வைத்தியர் பரந்தாமன்

"இந்த முறை கொரோனா வைரஸின் திடீர் மாற்றமடைந்த வடிவங்கள் பரவத் துவங்கியிருக்கின்றன. இப்படிப் புதிதாக மாற்றமடைந்த வைரஸ்களைப் பொறுத்தவரை, அவை மூக்கில், அதாவது மூச்சுக் குழாயின் துவக்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. கடந்த முறையைப் போல் அல்லாமல், நோயாளிக்கு ஆரம்பகட்ட அறிகுறி ஏற்படும்போதே, அதிக அடர்த்தியில் இந்த வைரஸ்கள் காணப்படுகின்றன. தவிர, பரவும் வேகமும் தொற்றும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

முன்பு, நோய்க்கான அறிகுறியே இல்லாமல் இருப்பவர்கள் அதிகம் இருப்பார்கள். கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு நோய்க்கான அறிகுறியே இருக்காது. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்குத்தான் நோய்க்கான அறிகுறி இருக்கும். ஆனால், இப்போது நோய்க்குறிகளுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது" என்கிறார் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியரான வைத்தியர் பரந்தாமன்.

இது தவிர, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மோசமான கட்டத்திற்குச் செல்வது மிக வேகமாக நடக்கிறது. முன்பெல்லாம் இதற்கு நோய் தாக்கி, ஏழு - எட்டு நாட்களாகும். ஆனால், இப்போது 4-5 நாட்களிலேயே அந்த நிலையை அடைந்து விடுகின்றனர்.

அதேபோல, கடந்த முறை குழந்தைகள், இளைஞர்களைப் பாதிப்பது மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அது மிகவும் அதிகரித்திருக்கிறது. முன்பு, இளைஞர்களுக்கு வந்தால் பெரும்பாலும், நோய்க்குறிகள் மிகக் குறைவாக இருக்கும். ஆனால், இப்போது வருபவர்கள், தீவிர நோய்க்குறிகளோடு, நிமோனியா நிலையில் வருகிறார்கள் என்கிறார் அவர்.

இதுபோக, ஒரு குடும்பத்தில் ஒருவரை நோய் தாக்கியதென்றால், குடும்பத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் நோய் தாக்கியிருக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஏனென்றால், நோய்க்குறி இல்லாத காலகட்டம் மிகக் குறைவாக இருப்பதால் நோய் தாக்கிய ஒருவர் தனக்கு நோய் தாக்கியிருப்பதை அறிவதற்கு முன்பே அந்நோய் பரவுவது அதிகரித்திருக்கிறது. இதனால், குடும்பத்தில் உள்ள அனைவருமே அதனால் பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

சிகிச்சை முறையில் மாற்றம் இருக்கிறதா?

corona vaccine

"சிகிச்சையைப் பொறுத்தவரை அதே சிகிச்சைதான் தொடர்கிறது. ஆனால், மருத்துவர்களின் அனுபவம் அதிகரித்திருக்கிறது. இப்போது ஒருவருக்கு ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளும் திறன் 80 ஆக குறைந்துவிட்டால் உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் அளிப்பதைத் துவங்கிவிடுகிறோம். வைரஸ் எதிர்ப்பு மருந்து, வென்டிலேட்டர் போன்றவற்றை அளித்தவுடன் அவர்கள் நிலை சற்று மேம்பட்டுவிடுகிறது.

உணவும் அருந்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால், வென்டிலேட்டரை எடுத்த பிறகு, ஆனால், சற்று நடக்க ஆரம்பித்தவுடன், அதாவது கழிப்பறைக்கு சென்று வந்தாலே ஆக்சிஜன் உள்ளிழுக்கும் அளவு மிகக் குறைய ஆரம்பித்துவிடுகிறது. நோயாளி மிகச் சிக்கலான இடத்திற்கு சென்றுவிடுகிறார்கள்.

குப்புறப்படுக்க வைக்கிறோம்

ஆகவே, இம்மாதிரியான நோயாளிகள் கழிப்பறைக்கு நடந்துசெல்வதை தடுக்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்கிறோம். தவிர, படுக்கும்போது குப்புறப்படுப்பதை மிகவும் ஊக்குவிக்கிறோம். ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கு குப்புறப்படுக்க வேண்டும். வீட்டிற்குச் சென்ற பிறகும் இரண்டு மாத காலத்திற்கு குப்புறப்படுப்பதை ஊக்குவிக்கிறோம்.

நன்றாக குணமடைந்துவரும் நோயாளிகள் வாய் வழியாக உணவருந்தும் நிலை ஏற்பட்டவுடன், சற்று அதனை அகற்றிவிட்டு உணவருந்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால், இப்போது உணவருந்தும் அந்த சிறிய காலகட்டத்தில்கூட மறுபடியும் ஆக்ஸிஜன் குறையும் நிலை ஏற்படுவதைப் பார்க்கிறோம். தண்ணீர் குடிப்பதற்காக கொஞ்ச நேரம் ஆக்ஸிஜனை அகற்றினால்கூட மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடுகிறது. அதனால், மூக்கில் மட்டும் தொடர்ந்து ஆக்ஸிஜனை அளிக்கும் வசதியை செய்துவிட்டு, சாப்பாட்டு, தண்ணீர் ஆகியவற்றைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம்.

சிகிச்சையைப் பொறுத்தவரை, மிக ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு LAMP என்ற வழிமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. இதில் L என்பது low molecular weight heparin. A என்பது azithromycin. M என்பது methylprednisolone என்ற ஸ்டீராய்ட். P என்பது Prone Positioning. சற்று தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு ReLAMP என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது மேலே சொன்ன சிகிச்சையோடு கூடுதலாக ரெம்டிசிவிர், எனாக்ஸபாரின் மருந்துகள் அளிக்கப்படும்.

தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு REVAMP என்ற சிகிச்சை வழிமுறை பின்பற்றபடுகிறது. அதாவது ரெம்டிசிவிர், எனாக்ஸபாரின், வென்டிலேட்டர், எல்லாவித உடல் உழைப்பையும் நிறுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக, ஓய்வும் துவக்கத்திலேயே வென்டிலேட்டரும் அளிப்பது மிக முக்கியம். அப்படிச் செய்தால், பெரிய சிக்கல் இல்லாமல் நோயாளிகளை மீட்டுவிட முடியும்" என்கிறார் டாக்டர் பரந்தாமன்.

கொரோனா இரண்டாம் அலை

தடுப்பூசி போட்டவர்களுக்கும் சில சமயங்களில் நோய் தாக்குகிறது என்றாலும், தடுப்பூசி போட்டவர்களுக்கு நோயின் தீவிரம் நிச்சயம் குறைவாக இருக்கும். தடுப்பூசி போட்ட பெரும்பாலானவர்களை அந்நோய் தாக்காது. எல்லோரும் கண்டிப்பாக அந்தத் தடுப்பூசியைப் போட்டே ஆக வேண்டும் என்கிறார் பரந்தாமன்.

இந்த முறை நோய் பரவும் தீவிரம் அதிகரித்திருக்கிறதா?

இந்த இரண்டாவது அலையில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் நிச்சயமாக அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். "இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, நோய்க் குறி இல்லாமல் இருப்பவர்களிடமிருந்தும் பெருமளவில் இது பரவ ஆரம்பித்திருக்கிறது. தவிர, இந்த முறை இந்த வைரஸ் மூச்சுப் பாதையின் துவக்கத்தில் அதாவது மூக்கில் தேங்குவது அதிகமாக இருக்கிறது. ஒரு முறை, மூக்கில் மாதிரியை எடுத்துப் பார்த்தால் அதில் 700 கோடி வைரஸ் இருக்கிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூச்சு விட்டால் ஒவ்வொரு முறையும் 20 வைரஸ் வெளியே வரும். பேச ஆரம்பித்தால் ஒரு நிமிடத்தில் 200 வைரஸ் வெளியேறும். அதே நபர் இருமினாலோ, தும்மினாலோ 200 மில்லியன் வைரஸ்கள் வெளியே வரும். அப்படியானால், எந்த அளவுக்கு அருகில் இருக்கும் நபர் பாதிக்கப்படுவார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒருவர் பாதிக்கப்படுவதற்கு 1,000 வைரஸ்கள் போதுமானது. ஆனால், இந்த முறை இந்த வைரஸ் பரவும் வேகம், தீவிரம் எல்லாமே அதிகமாக இருக்கிறது" என்கிறார் பரந்தாமன்.

corona tips

தவிர நோய் பாதிப்புடன் வரும் நோயாளிகளை எக்ஸ் ரே எடுத்துப் பார்க்கும்போது நிமோனியா பாதிப்பு அதிகம் இருப்பது தெரிந்தால், மூச்சுவிட சிரமப்படுவார்கள். பாதிப்பு குறைவாக இருந்தால், மூச்சுத் திணறல் குறைவாக இருக்கும். "ஆனால், இப்போது பாதிப்பு குறைவாக இருந்தால்கூட மூச்சுத் திணறல் அதிகம் இருப்பதைப் பார்க்கிறோம். சிலருக்கு நிமோனியா அதிகம் இருந்தாலும் சிலருக்கு மூச்சுத் திணறல் குறைவாக இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக மதிப்பீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது" என்கிறார் பரந்தாமன்.

ஆனால், கடந்த ஓராண்டாக இந்த நோயுடன் போராடிவருவதால், ஒருவருக்கான சிகிச்சையை மருத்துவர்களால் எளிதில் தீர்மானிக்க முடிகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு வர வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். தவிர, முகக் கவசம், சானிடைசர் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம் என்கிறார் அவர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி