1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ்நாட்டில் ரத்த தானம் செய்துவந்த தன்னார்வலர்கள் பலர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், ரத்த வங்கிகளில் இந்த ஆண்டு ரத்த சேமிப்பு கணிசமாக குறைந்துள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர்கள், முதலில் ரத்த தானம் செய்துவிட்டு, பின்னர் தடுப்பூசி போட்டுகொண்டால் ரத்த வங்கிகளில் தட்டுப்பாட்டை குறைக்கமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் செயற்பட்டு வருகின்றன. அதோடு, பல தன்னார்வ அமைப்புகளும் ரத்த தான முகாம்கள் நடத்தி ரத்த வங்கிகளில் சேமிக்கின்றன.

ஆனால் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கம் தன்னார்வலர்கள் பலர் மத்தியில் உயிர்பயத்தை ஏற்படுத்தியுள்ளதால், ரத்த தானம் செய்யவில்லை.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டு போதிய இடைவெளி விட்ட பிறகே ரத்த தானம் செய்ய முடியும் என்பதால் அவர்களால் சுமார் 70 நாள்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது.

சென்னையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கியில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிபவர் மரு.ரவீந்திரன். கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தடுப்பூசி இல்லாததாலும், தன்னார்வலர்கள் பலரும் ரத்த தானம் செய்ய முன்வரவில்லை என்கிறார் அவர்.

''2019ல் நாங்கள் 12,000 யூனிட் ரத்தம் சேமித்தோம். 2020ல் வெறும் 3,500 யூனிட் மட்டுமே சேமிக்க முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 150 ரத்த தான முகாம்களை நாங்கள் நடத்துவோம். ஆனால் கடந்த ஆண்டு வெறும் 65 முகாம்கள் மட்டுமே நடத்தமுடிந்தது. கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 சதவீதம் ரத்த வங்கிகளில் சேமிப்பு குறைந்தது. இந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகும் என்பது வெளிப்படை,'' என்கிறார் ரவீந்திரன்.

குறிப்பாக 18 முதல் 45 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துவருவதால், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்னர் ரத்த தானம் செய்துவிட்டு சென்றால், ரத்த வங்கிகளில் தட்டுப்பாட்டை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்கிறார் அவர்.

''உலக சுகாதார நிறுவனம் மற்றும் தேசிய ரத்த மாற்று கவுன்சில் வழிகாட்டுதலின் படி, ரத்த தானம் செய்தவர்கள் 48 மணிநேரம் அதாவது இரண்டு நாட்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இதனால், முதலில் ரத்த தானம் செய்துவிட்டால், பிறகு அந்தக் கொடையாளி தடுப்பூசியின் இரண்டு டோசும் போட்டுக் கொண்ட பின் 30 நாள் கழித்து மீண்டும் ரத்த தானம் செய்யலாம். இல்லாமல் கொடையாளிகள் எல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தொடங்கினால் அவர்கள் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டு பிறகு 30 நாள் இடைவெளி விட்டு ரத்த தானம் செய்துகொள்ள தகுதியாகும் வரை ரத்த வங்கிகளில் வரத்து தட்டுப்பாடு ஏற்படலாம்,'' என்கிறார் ரவீந்திரன்.

''சாலை விபத்துகள் கடந்த ஆண்டு குறைவாக இருந்தது. பல அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன. ரத்தத்தின் தேவை சிறிதளவு குறைந்திருந்தாலும், நம்மிடம் அவசிய தேவைக்கு இருக்கவேண்டிய அளவு ரத்த வங்கிகளில் இல்லை,'' என்கிறார் அவர்.

ரத்த தானம்.

தமிழ்நாடு முழுவதும் ரத்த தான முகாம் நடத்திவருபவர் தன்னார்வலர் ச.சரவணன். 'விழித்திடு,விதைத்திடு' என்ற அமைப்பின் மூலம் சுமார் 1,600 யூனிட் ரத்தத்தை அரசு மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சரவணன் அளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் அரிதான ரத்த வகையை கொண்ட நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ரத்தத்தை அளிப்பதில் சிரமம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

''ஏ நெகடிவ் மற்றும் ஏபி நெகடிவ் உள்ளிட்ட அரிதான ரத்த வகை கொண்ட நபர்களுக்கு உடனடியாக ரத்தம் கிடைப்பது சிரமம். அரிதான ரத்த வகை கொண்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்னர், ரத்த தானம்செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்.

தடுப்பூசி முகாம்களுக்கு வருபவர்களிடம் ரத்த தானத்தின் அவசியத்தை உணர்த்தலாம். அதிலும், கொரோனா காலத்தில் ரத்த சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பதை விளக்கலாம். ரத்த தானம் செய்யவருபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மருத்துவமனைகளில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தருவது முக்கியம்,''என்கிறார் சரவணன்.

''ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளை உடனடியாக அரசாங்கம் நிறுவுகிறது. ஆனால் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த தேவையை உடனடியாக தீர்க்க முடியாது. தடுப்பூசி முகாம்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ரத்த தானத்திற்கு இப்போது தரவேண்டும்,'' என்றும் கூறுகிறார் அவர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி