1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி உட்பட ஏனைய அணி அமைப்புகளின் செயற்பாடுகளை வழமைபோல முன்னெடுப்பதற்கு தேவையான

அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுடைய உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்தும் எங்களுடன் பயணிக்க முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன்,

மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் ஏனைய அணி அமைப்புகளின் செயற்பாடுகளில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வெளியேற்றப்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் எங்களுடைய செயற்பாடுகள் ஊவாவில் முன்னெடுக்கப்படும்.

மிக விரைவில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பதுளைக்கு விஜயம் செய்து அங்கிருக்கின்ற எங்களுடைய பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் தோட்ட கமிட்டி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.அவர்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் மலையக மக்கள் முன்னணி பதுளை மாவட்டத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பதுளை மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை சேர்ந்த பலரும் எங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தற்பொழுது கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பாக முதலில் எங்களுடைய பதுளை மாவட்டத்தில் இருக்கின்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி அவர்களை இணைத்துக் கொண்டு செயற்படுவதுடன் கடந்த காலங்களை போன்று சுமுகமாக செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.

எந்த காரணம் கொண்டும் பதுளை மாவட்டத்தில் உள்ள எங்களுடைய உறுப்பினர்களை கைவிட மாட்டோம்.மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பானது தனி நபர்களை சார்ந்த அமைப்பாக என்றுமே செயற்பட்டதில்லை.அது மக்கள் சார்ந்த ஒரு அமைப்பாகவே செயற்பட்டு வந்துள்ளது. எனவே தொடர்ந்தும் அந்த என்னத்துடன் செயற்படுவோம்.இந்த கட்சியானது முழுமையாக ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாகும்.

அனைவருடைய கருத்துக்களையும் உள்வாங்கி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும். எனவே தொடர்ந்தும் அனைவருடைய ஒத்துழைப்பையும் மலையக மக்கள் முன்னணிக்கும் அதன் அணி அமைப்புகளுக்கும் வழங்குமாறு நான் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.

மலையக மக்கள் முன்னணி தொடர்ந்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் பயணிக்கும்.அந்த வகையில் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற பொழுது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ஆகியோருடைய ஒத்துழைப்புடன் ஊவாவில் நாங்கள் செயற்படுவோம்.

எதிர்வருகின்ற தேர்தலில் நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்படுவோம்.கூட்டணிக்கு நல்ல ஒரு பலம் இருக்கின்றது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது.எனவே தொடர்ந்தும் நாங்கள் ஜக்கிய மக்கள் சக்தியுடன் பயணிப்போம் அதில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று இந்த அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை மக்கள் எதிர்வரும் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள். அதன் அடிப்படையில் நாங்கள் எதிர்காலத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி