1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 471 ஆவது பக்கத்தில், “நாட்டில் இருக்கும் ‘இஸ்லாமிய’ தீவிரவாதத்தின் பிரதான பங்கு வகித்த விடயம் தவ்ஹீத்

(வஹாபிஸம்) கொள்கை ஆகும். அதேபோன்று ஆரம்ப நிலையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாத ‘பௌத்த’ தீவிரவாதமும் நாட்டில் ‘இஸ்லாமிய’ தீவிரவாதம் மேலும் தீவிரமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளமையானது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அவதானிப்பு அல்ல' என்று முஸ்லிம் சமூகத்தின் மூத்த பிரமுகர்கள் நால்வர் இணைந்து கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் மத்தியிலுள்ள ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளுக்காக இஸ்லாத்தின் மீதோ அல்லது பௌத்த மதத்தின் மீதோ குற்றம் கூறுவது நியாயம் அல்ல என்றும் அவை ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இவ்வாறு தவறான முறையில் குறிப்பிடப்படுவதன் மூலம் சர்வதேச ரீதியில் இருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் எமக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கு அது ஒரு சாதகமான காரணியாக அமைந்து விட முடியும்.

நாட்டில் நிலவும் தீவிரவாதத்தில் பிரதான பங்கு வகிப்பது ‘தவ்ஹீத் கொள்கை’ எனும் கூற்றை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு பிரிவுகளும் சடங்குகளும் இருப்பது உண்மை. அத்தோடு ஷாபிஈ, ஹனபி, மாலிகி, ஹன்பலி மற்றும் தப்லீஹ், தவ்ஹீத், சூபி, முவஹ்ஹிடீன்(வஹாபி) என்றும் பல்வேறு பிரிவுகள் உள்ளன.

எனினும், அவை இஸ்லாமிய அடிப்படை கற்பித்தல்களுக்கு அஹ்மதிய்யா போன்று முரணானவை அல்ல. மேலும், இந்த பன்முகத்தன்மையை சகல முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுள்ளதுடன், வித்தியாசங்கள் எமக்குரிய அழகு என்றும், அந்த வித்தியாசங்களை கௌரவத்துடன் அணுகுவதும், அவை முஸ்லிம்களுக்கிடையில் பாரிய பிரிவுகளுக்கு, ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, காரணமாக அமையவில்லை என்பதும் சகல முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்ட விடயங்களாகும்.

குறித்த விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான பரிந்துரைகள் செய்யப்பட்டால் அது மக்களுக்கு மத்தியில் வெறுப்பு மற்றும் பேதங்களை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எம்மிடமுள்ளது.

இதேவேளை முஸ்லிம்களாகிய எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் மற்றுமொரு விடயத்தை ஆணைக்குழுவின் அறிக்கையில் காணக் கூடியதாக உள்ளது. அதாவது, “அவர்களின் தலைவர்களில் ஒருவரைக் கடவுள்” என்று சூபிகள் நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சூபிகள் தவறாகக் காட்டப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சூபிகளும் ஏக இறைவன் ஒருவனை மாத்திரமே வணங்குகின்றனர் என்பதையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். தவ்ஹீத் மற்றும் சூபி உள்ளிட்ட சகல இஸ்லாமிய பிரிவுகளிலும் உள்ளவர்கள் உறுதியான ஓரிறை நம்பிக்கை கொண்டவர்களாவர்.

அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். இவர்கள் இறைவசனங்களான அல் குர்ஆனையும் நபியவர்களின் ஸுன்னாக்களையுமே பின்பற்றுகின்றனர். காலத்துக்கு காலம் வரும் உலமாக்கள், அறிஞர்கள் மற்றும் ஞானிகளின் அறிவுரைகளில் குர்ஆனுக்கும் ஸஹீஹான ஹதீஸுகளுக்கும் முரணில்லாத விடயங்களை முஸ்லிம்கள் பின்பற்றுவார்கள்.

எம்.எம். ஸுஹைர்
(ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

லதீப் பாரூக்
(மூத்த ஊடகவியலாளர், நூலாசிரியர்)

மாஸ் எல். யூசுப்
(சட்டத்தரணி, எழுத்தாளர்)

மன்சூர் தஹ்லான்
(சன்மார்க்கப் போதகர்)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி