1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

'ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமைக்காரர்கள் நாம்தான். எனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளும் விரைவில் ஒரே கூரையின் கீழ் ஒன்றாகத்தான் போகின்றன.

அப்போது பலம் வாய்ந்த சக்தியாக மாறி நாட்டின் அதிகாரம் எங்கள் கரங்களுக்குள் வருவது உறுதி' என்று-முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாஷிம் கூறுகின்றார்

'முஸ்லிம்களுடன் கலந்துரையாடியே அவர்களின் மத விவகாரங்களை அரசு கையாள வேண்டும்' என்றும் கபீர் ஹாஷிம் மேலும் கூறுகின்றார்.

'ஒரு நாட்டின் மத, கலாசார விழுமியங்களில் அரசு கை வைப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட மதத்தினருடன் கலந்துரையாடிய பின்னரே அவ்விடயமாக தீர்மானத்திற்கு வர வேண்டும். முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகளே. எனவே அவர்களின் மத, கலாசார, உடை, குர்ஆன், மத்ரஸாக்கள் உள்ளிட்ட இஸ்லாமிய மத விவகாரங்களில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முன்வருவது தவறாகும்' என்றும் கபீர் ஹாஷிம் தினகரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"முஸ்லிம்களின் மத, கலாசார விடயங்களில் அரசு தன்னிச்சையாக செயற்பட முடியாது. அவ்வாறு நடப்பது அவர்களது மத சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். ஜனநாயக உரிமையை மீறுவதாகும். இதனை உணர்ந்து முஸ்லிம்களுடன் பேசியே தீர்மானம் எடுக்க வேண்டும். பௌத்த விகாரைகளுக்குச் சென்று பௌத்த சமயத்தை வலியுறுத்தியும் ஊக்குவித்தும் வருகின்றனர். மறுபுறத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் சமயக் கல்வியை இல்லாமலாக்க முயற்சித்து வருகிறார்கள். ஜனாஸா எரிப்பு விடயத்திலும் அரசு தோல்வியையே தழுவியுள்ளது' எனவும் கபீர் காசிம் தெரிவித்தார்.

கேள்வி: இந்த அரசு எல்லாத் துறைகளிலும் தோல்வி என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

பதில்: நாட்டு நிர்வாகம், அரசியல், பொருளாதாரம், நீதித்துறை என்று எல்லாத் துறைகளிலும் நாடு சீர்குலைந்துள்ளது என்பதையே இன்றுள்ள நி​லவரங்கள் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அரசியல் பழிவாங்கல்கள், கைதுகள் தொடர்கின்றன. காடுகளை அழித்து நாட்டையே அழிவுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளில் பொருட்களின் விலைகள் குறைந்து கொண்டிருக்கும் நிலையில் எமது நாட்டிலோ அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையானது அதிகரித்துள்ளது. ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

கேள்வி: இன்றுள்ள நிலையில் நாடு சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்தில் வரும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஆம், நிச்சயம் எமது கரங்களுக்குள் வரக் கூடிய சாத்தியக் கூறுகளே தற்போது உருவாகியுள்ளன. நாட்டில் பிரதானமாக ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலோ வருமாயின் எமது ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி ஈட்டும் என்பது உறுதி.

கேள்வி: இதனை எந்த அடிப்படையில் உறுதிபட கூறுகிறீர்கள்?

பதில்: நாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேலைத் திட்டத்தின் ஊடாக பெருகி வரும் ஆதரவு மூலம் அடுத்து ஆட்சி அமைப்பது நாம் என்பது தெளிவாகி வருகிறது.

கேள்வி: சஜித் அணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டம் என்ன?

பதில்: சஜித்தின் தலைமையில் உருவான ஐக்கிய மக்கள் சக்தி கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே குறுகிய காலத்திற்குள் நாட்டில் மிகப் பெரிய இரண்டாம் சக்தியாக வந்து எதிர்க் கட்சியாகியது. இந்நிலையில் எமது கட்சிகளை நாடளாவிய ரீதியில் உருவாக்கியும் உள்ளதை புணரமைப்புச் செய்தும் வருகிறோம். எமது உயர் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இதுவரை நாட்டின் 18 மாவட்டங்களில் நேரடியாகச் சென்று கிளைகளுக்கு புத்துயிரூட்டி வருகின்றனர். அதன் போது அணிதிரளும் பேராதரவு எமக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது. எமது தலைவர் சஜித் முன்னெடுத்துச் செல்லும் மக்கள் சுதந்திரம், நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயக உரிமை பேணல் உள்ளிட்ட செயற் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டு வருவதை நாம் சென்ற இடங்களில் எல்லாம் அவதானிக்க முடிகிறது.

சஜித்தின் தலைமையில் நாட்டின் அதிகாரம் சென்றடைவதை இந்த மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. எனவே கட்சிக் கிளைகள் தோறும் செயற்பாட்டு குழுக்கள் அமைத்து அவர்களுக்கான அரசியல் பயிற்சி வழங்குவதை எமது செயற் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகக் கொண்டுள்ளோம். அதன் மூலம் குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் நாட்டின் நிர்வாகம், கிளைகளின் செயற்பாட்டுக் குழுக்களிடமும் பகிர்ந்தளிக்கப்படுவதால் மக்கள் மயமாக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

கேள்வி: ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்று இரண்டாகப் பிளவு பட்ட நிலையில் சஜித்தால் அதிகாரத்திற்கு வர முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமைக்காரர்கள் நாம்தான். எனவே இரு அணிகளும் விரைவில் ஒரே கூரையின் கீழ் ஒன்றாகத்தான் போகின்றன. அப்போது பலம் வாய்ந்த சக்தியாக மாறி நாட்டின் அதிகாரம் எங்கள் கரங்களுக்குள் வருவது உறுதி.

தினகரன்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி