1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தாய்வானில் சுமார் 490 பேருடன் சென்ற ரயில் குகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கட்டுமாண ட்ரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிய வந்திருக்கிறது.

8 பெட்டிகளைக் கொண்ட ரயிலின் பல பெட்டிகள் மோசமாகச் சேதமடைந்துவிட்டன. அவற்றுக்குள் சிக்கியிருந்த பலரை மீட்புக் குழுவினர் மீட்டனர். பலர் ஜன்னல்களை உடைத்து வெளியேறினர்.

தலைநகர் தைபேயில் இருந்து டைட்டங் என்ற நகரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது, ஹுவாலியன் என்ற பகுதியில் ரயில் விபத்துக்குள்ளானது. வருடாந்த விடுமுறையைக் கழிப்பதற்காக ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அனைத்துப் பெட்டிகளும் முற்றிலுமாக நிரம்பியிருந்ததால், பலர் நின்று கொண்டிருந்தனர்.

மணிக்கு அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் செல்லக்கூடிய அந்த ரயில் பொதுவாக பாதுகாப்பான பயணத்துக்குப் பெயர் பெற்றது.

கடந்த பல பத்தாண்டுகளில் தைவானில் நடந்திருக்கும் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தைவான் அதிபர் ட்சாய் இங்-வென் இரங்கல் தெரிவித்திருக்கிறார். விபத்து குறித்த விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

ரயில் விபத்து

உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு விபத்து நடந்திருக்கிறது. விபத்து நேரிட்டதும் ரயிலின் பின் பகுதி பெட்டியில் இருந்த பலர் காயம் ஏதுமின்றி ரயிலில் இருந்து வெளியேறி விட்டனர். முதல் நான்கு பெட்டிகளில் இருந்து சுமார் 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இறந்தவர்களில் பலரும் கட்டுமான வாகனத்தில் மோதி நசுங்கிப்போன முதல் 4 பெட்டிகளில் இருந்திருக்கின்றனர். ரயிலின் ஓட்டுநரும் விபத்தில் இறந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் விபத்து

"திடீரென ரயில் அதிர்ந்து குலுங்குவதை உணர்ந்தேன். அதன் பிறகு தரையில் நான் விழுந்து கிடந்தேன். ஜன்னலை உடைத்து ரயிலின் மேல்பகுதி மீது ஏறி நாங்கள் வெளியேறினோம்" என்று தப்பி வந்த ஒரு பெண் கூறினார். தரையில் விழுந்து தலையில் கடுமையாக அடிபட்டதில் அதிக ரத்தம் வழிந்ததாக மற்றொரு பெண் தெரிவித்தார்.

இருக்கைகளின் அடியில் பலர் சிக்கியிருந்ததையும் மனித உடல்கள் எங்கும் சிதறிக் கிடந்ததையும் பார்த்ததாக தப்பி வந்த 50 வயதுள்ள ஒருவர் கூறினார்.

தைபே

தைபே

குகைப் பாதையை ஒட்டி கட்டுமாணப் பணி நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்ட தட்டை வடிவ ட்ரக் ஒன்று விபத்து நடந்த இடத்தில் கிடப்பதை புகைப்படங்களில் காணமுடிகிறது. எனினும் தண்டவாளத்தில் ட்ரக் எப்படி விழுந்தது என்பது தெரியவில்லை.

கல்லறைகளைச் சுத்தம் செய்து முன்னோருக்கு மரியாதை செலுத்தும் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை தாய்வானில் கொண்டாடப்படுகிறது. இதற்காகவே பலர் ரயிலில் பயணம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

1991ஆம் ஆண்டு தாய்வானில் நடந்த ரயில் விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். 112 பேர் காயமடைந்தனர். அதன் பிறகு மற்றொரு மிக மோசமான விபத்தை தைவான் சந்தித்திருக்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி